பஸ் நிலையத்தில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து 2 பெண்கள் காயம்


பஸ் நிலையத்தில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து 2 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 26 Nov 2021 9:05 PM IST (Updated: 26 Nov 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையத்தில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து 2 பெண்கள் காயம்


கோவை

காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் பஸ்நிலையத்தின் மேற்கூரையில் இருந்த கான்கிரீட் சிமெண்ட் திடீரென்று பெயர்ந்து, 

விழுந்தது. இதனால் அங்கு நின்ற பயணிகள்அதிர்ச்சி அடைந்து நிழற்குடையை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

ஆனாலும் கான்கிரீட் சிமெண்ட் கற்கள் விழுந்ததில் 2பெண்களுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. 

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 

அதில் 2பெண்களும் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

யாரும் நிற்க வேண்டாம்

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. 

இதன் காரணமாக மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததாக தெரிகிறது. 

இதையடுத்து ஆபத்தான வகையில் இருந்த சிமெண்ட் பூச்சுகளை சுகாதார பணியாளர்கள் அகற்றினர். 

இதனால் தற்போது மேற்கூரை யில் கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு இருக்கிறது. 


எனவே அந்த பகுதியில் பயணிகள் யாரும் நிற்க வேண்டாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு சோமனூர் பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். 

கோவையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகாரிகள் ஆய்வு செய்து காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் உள்பட பஸ் நிலைய மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

என்ஜினீயர்கள் குழு ஆய்வு

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில், 

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் உள்பட அனைத்து பஸ்நிலைய கட்டிடங்களின் மேல் தளத்தில் உள்ள செடிகள், குப்பைகள் மற்றும்  தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

காந்திபுரத்தில் மேல்தள கான்கிரீட் பெயர்ந்து விழுந்த இடத்தில் மீண்டும் சீரமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

காந்திபுரம் பஸ் நிலைய கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும் என்ஜினீயர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்றார்.


Next Story