3 பேருக்கு தலா 1 நாள் சிறை


3 பேருக்கு தலா 1 நாள் சிறை
x
தினத்தந்தி 26 Nov 2021 9:07 PM IST (Updated: 26 Nov 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

3 பேருக்கு தலா 1 நாள் சிறை


கோவை

நாட்டு கோழி பண்ணை வைத்து ரூ.2¼ கோடி மோசடி செய்த வழக்கில் பண்ணை உரிமையாளர்கள் 3 பேருக்கு தலா 1 நாள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாட்டு கோழி பண்ணை

ஈரோடு மாவட்டம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர்கள் சசி என்ற கோவிந்தசாமி (வயது40), ஆனந்தன் (35), செந்தில்குமார் (46), ரத்தினசாமி (50). 

இவர்கள், கடந்த 2012-ம் ஆண்டு அன்பு பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தினர்.

 அப்போது அவர்கள் பொதுமக்களை கவரும் வகையில் முதலீட்டு திட்டங்களை அறிவித்தனர். 

அதன்படி ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதுடன், 3,750 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். 

மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.9 ஆயிரம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். 

3 ஆண்டு முடிவில் முதலீட்டு தொகை ரூ.1½ லட்சம் திருப்பி தரப்படும் என்று அறிவித்தனர். 

அதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். 

ஆனால் அவர்கள் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ஈரோடு மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 


அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் 109 பேரிடம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. 

3 பேருக்கு 1 நாள் சிறை

இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 

நாட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் சசி என்ற கோவிந்தசாமி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கு 1 நாள் கோர்ட்டு கலையும் வரைசிறை தண்டனை விதித்தார்.

மேலும் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் அபராதமும், 

அதை கட்ட தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.  ரத்தினசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்க படாததால் விடுவிக்கப் பட்டார்.

Next Story