பள்ளிக்கூடத்துக்குள் தண்ணீர் புகுந்தது
பள்ளிக்கூடத்துக்குள் தண்ணீர் புகுந்தது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் விடிய, விடிய பெய்த மழையால், பள்ளிக்கூடத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது.
தரைப்பாலம் மூழ்கியது
பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் காலையில் இருந்து லேசான மழை பெய்தது. பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது பெய்தது. மேலும் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக கெங்கம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, சோமந்துறைசித்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக கெங்கம்பாளையம் தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. சோமந்துறைசித்தூரில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
ஆனைமலை பகுதியில் பெய்த மழையினால் நெல் வயல் மற்றும் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதையடுத்து விவசாயிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூடத்தில் புகுந்த மழைநீர்
சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து பொள்ளாச்சி மரப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளி வளாகம் முன் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் வகுப்பறைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் சேறும், சகதியுமாக மாறியது.
இதையடுத்து பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகளுக்குள் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் வகுப்பறைகளுக்குள் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரை வெளியேற்றிய பின், தண்ணீர் கொண்டு வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி பவுடர் அனைத்து இடங்களிலும் போடப்பட்டது.
மேலும் மீண்டும் மழைநீர் பள்ளிக்குள் புகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி என்ஜினீயர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story