தேங்கிய மழைநீரில் சிக்கிய வாகனங்கள்
திருமங்கலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் சிக்கி கொண்டன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் சிக்கி கொண்டன.
சுரங்கப்பாதையில் தண்ணீர்
திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையில் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
இந்த பாலத்தை கடந்து மேலக்கோட்டை, மைக்குடி, பாரப்பத்தி, கூடக்கோவில் வழியாக காரியாபட்டி செல்ல வேண்டும். கனமழையால் இந்த சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியதால் நேற்று முன்தினம் இரவு முதல் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வாகனங்கள் சிக்கின
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருமங்கலம் நோக்கி நள்ளிரவில் வந்த கார் ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கியது. காரின் உள்ளே அமர்ந்து இருந்தவர்கள் அவசர அவசரமாக வேன் கதவுகளைத் திறந்து தண்ணீரில் நீந்தி வெளியேறினர்.
இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தண்ணீரில் சிக்கிய காரை நேற்று காலை வரை எடுக்க முடியவில்லை. இதேபோல் அந்த வழியாக வந்த 2 வேன்களும் சுரங்கப் பாதையில் சிக்கி கொண்டன. இதனால் அந்த சுரங்கப்பாதை வழியாக மற்ற வாகனங்கள் எதுவும் கடந்து செல்ல முடியவில்லை.
மாற்றுப்பாதை
இதைதொடர்ந்து மேலக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதைைய சூழ்ந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள். அதன்பிறகே வாகனங்கள் அங்கிருந்து வெளியே செல்ல முடிந்தது. மேலக்கோட்டை சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் திருமங்கலம்- காரியாபட்டி இடையே போக்குவரத்து மாற்றுப்பாதை வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மழையால் திருமங்கலம் அருகே உள்ள புள்ளமுத்தூர், தங்களச்சேரி, கொண்டுரெட்டியபட்டி, அச்சம்பட்டி, ஆலம்பட்டி ஆகிய பகுதிகளில் சில வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து வருவாய் துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story