தினத்தந்தி செய்தி எதிரொலி; சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணி பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி
தினத்தந்தி செய்தி எதிரொலியால் சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் நடைபெறும் இரவு 8 மணி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னிமலை
தினத்தந்தி செய்தி எதிரொலியால் சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் நடைபெறும் இரவு 8 மணி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னிமலை முருகன்
சென்னிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு காலைசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு ராக்கால பூஜை மற்றும் இரவு 8 மணிக்கு அர்த்தசாமம் பூஜை என தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் பகல் 12 மணிக்கு நடைபெறும் உச்சி கால பூஜை மற்றும் இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தசாமம் பூஜையில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தசாமம் பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக மலை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தினத்தந்தியில் செய்தி
இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்ட பிறகும் இரவு 8 மணி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால் தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்களும் முருகனை தரிசிச்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள்.
அதனால் சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்த செய்தி கடந்த மாதம் தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தசாமம் பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் வார நாட்களில் இரவு 7.30 மணி வரையும், செவ்வாய்கிழமை நாட்களில் இரவு 7.45 மணி வரையும் தார்சாலை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பல மாதங்களுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணி பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story