பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Nov 2021 2:21 AM IST (Updated: 27 Nov 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு
பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோமாரி நோய் தாக்குதல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேதியை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
உரத்தட்டுப்பாடு
மாவட்டத்தில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புக்கான கொள்முதல் பணத்தை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
வன உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் பழங்குடி மக்களுக்கு வன உரிமைகள் கிடைக்காத நிலை உள்ளது. மாடு மேய்க்க கூட வனத்துறை அனுமதிப்பது இல்லை. வனக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை வனத்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இலவச மின் இணைப்பு
மலைப்பகுதியில் தொடர் மழையினால் ராகி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதில் அளித்து பேசியதாவது:-
கோமாரி நோய் தடுப்பூசிகள் முழுமையாக போடப்படும். யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்திற்கு தேவையான அளவு உரங்கள் கோரப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
மலைப்பகுதிகளில் பட்டா இல்லாதவர்கள், பட்டா இருந்தும் வீடு இல்லாதவர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், சாலை வசதிகள் தேவைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ரூ.16 கோடிக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்து கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
பயிர் கடன்
கூட்டுறவு வங்கியில் ரூ.3 லட்சம் வரை பெறப்படும் பயிர் கடனில், அதற்கான ஏ.டி.எம்.ல் முன்பு, ஒரு நாளில், ரூ.20 ஆயிரம் மட்டுமே பெற முடியும். விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று நேற்று முதல் ஒரு நாளில் ரூ.1 லட்சம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு, ரூ.20 ஆயிரம் மதிப்பில் உரம் வழங்கப்படுகிறது. உரம் தட்டுப்பாடு, அவர்களுக்கு தேவையான உரம், தேவையான நேரம் கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக மொத்தமாக எடுத்து செல்ல கூறுகிறோம். 6 மாத காலத்துக்குள் பிரித்து தர கேட்டுள்ளனர். இதுபற்றி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி     கூறினார்.
கருத்துக்காட்சி
அதைத்தொடர்ந்து கலெக்டர், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கருத்துக்காட்சியினை பார்வையிட்டார். முன்னதாக விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் எழுந்து நின்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

Next Story