ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை


ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை
x
தினத்தந்தி 27 Nov 2021 2:21 AM IST (Updated: 27 Nov 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை பெய்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை பெய்தது. 
விடிய விடிய மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புயல் சின்னம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் சூரியனையே காணமுடியவில்லை. 
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, சத்தி, அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை, கோபி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நிற்காமல் தொடர் மழை பெய்தது. மிக அதிக கனமழையாகவும் இல்லாமல், சாரல் மழையும் இல்லாமல் மிதமாக பெய்துகொண்டே இருந்தது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிரான இடங்களில் இருப்பதுபோல் இருந்தது. 
மாணவ-மாணவிகள்
நேற்று காைல முதல் மாலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் பெய்வதும் பின்னர் ஓய்வதுமாக இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு இருசக்கர வாகனங்களில் புறப்பட்டவர்களும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டார்கள். விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன. 
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. 
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
கட்டுமான பணிகள் பாதிப்பு
 விட்டு, விட்டு சாரல் மழை பெய்ததால் நேற்று பல இடங்களில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது.
இதேபோல் வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டார்கள். பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும் அவதிப்பட்டார்கள். 
ஒரத்துப்பாளையம் அணையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 11 அடி தண்ணீர் இருந்தது. 
அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
நேற்று காலை நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
குண்டேரிப்பள்ளம் - 34.6
கொடுமுடி - 31.6
ஈரோடு - 20
மொடக்குறிச்சி - 20
பெருந்துறை - 18.5
பவானி - 15.2
சென்னிமலை - 14
சத்தியமங்கலம் - 13.4
கவுந்தப்பாடி - 13.2
அம்மாபேட்டை - 10.2
கோபி - 9.4
பவானிசாகர் - 8.4
கொடிவேரி - 8
நம்பியூர் - 6
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.
ஈரோட்டில் பல நாட்களுக்கு பிறகு 20 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. 
மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளத்தில் 34.6 மி.மீட்டர் மழை பதிவானது.

Next Story