ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; நள்ளிரவில் போலீஸ் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; நள்ளிரவில் போலீஸ் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 8:51 PM GMT (Updated: 26 Nov 2021 8:51 PM GMT)

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் கிராம மக்கள் போலீஸ் வாகனங்களை சிறைபிடித்தார்கள். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் கிராம மக்கள் போலீஸ் வாகனங்களை சிறைபிடித்தார்கள். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
குண்டேரிப்பள்ளம் அணை
கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. 42 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் கோடை காலங்களில் வனக்குட்டைகள் வற்றிவிட்டால், யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்க குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும். 
ஆழ்குழாய் அமைக்க எதிர்ப்பு
இந்தநிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் அருகே ஒரு தனியார் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குழாய் மூலமாக 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 6 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அணை அருகே ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் அணையின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வினோபாநகர் கிராம மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஆழ்குழாய் அமைத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. 
தடை உத்தரவு
தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து ஆழ்குழாய் அமைக்கும் பணியை தனியார் தொடங்கினார்கள். உடனே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டார்கள். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோர்ட்டு உத்தரவுக்கு தடை உத்தரவுபெற 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேட்டார்கள். அதிகாரிகளும் அவகாசம் அளித்தார்கள். ஆனால் கிராம மக்களால் தடை உத்தரவு பெறமுடியவில்ைல. 
சிறைபிடிப்பு
கால அவகாசம் முடிந்ததால் தனியார் மீண்டும் ஆழ்குழாய் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். போராட்டத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த வேலுமணி, ரவி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்களாப்புதூர் போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் கொண்டு சென்றனர். மேலும் ஆழ்குழாய் அமைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு பணிக்காக பங்களாப்புதூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார்  குவிக்கப்பட்டு இருந்தார்கள். 
இதுபற்றிய தகவல் பரவியதும் நள்ளிரவு 1 மணி அளவில் வினோபாநகர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆழ்குழாய் அமைக்கப்படும் இடத்துக்கு திரண்டு வந்து,  பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களையும், குழாய் அமைக்க கொண்டுவரப்பட்ட பொக்லைன் எந்திரங்களையும் சிறைபிடித்தார்கள். 
கால அவகாசம்
மேலும் நேற்று காலை கொங்கர்பாளையத்தில், டி.என்.பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் அப்பகுதி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், ஏற்கனவே நீங்கள் தடை உத்தரவு பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் பெறவில்லை. வேண்டுமென்றால் அடுத்த மாதம் 17-ந் தேதி வரை மீண்டும் தடை உத்தரவு பெற கால அவகாசம் தருகிறோம். அதன்பின்னரும் உங்களால் தடை உத்தரவு பெற முடியவில்லை என்றால் தனியார் குழாய்களை பதிக்க நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றார்கள். இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story