பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன்
பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன்
பொள்ளாச்சி
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த நேசமணி (வயது31). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் இடையே முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இருவரும் செல்போன் எண்ணை பறிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கடந்த ஒரு மாதம் திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த போலீஸ்காரர் நேசமணி அந்த பெண் மீது ஆத்திரத்தில் இருந்தார். பின்னர் அந்த பெண்ணுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நேசமணி சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் நேசமணி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழிற்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அவரை பிடித்து வந்து நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணும் நேசமணியும் காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றதால், ஆத்திரத்தில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. மேலும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் மீண்டும் என்னுடன் பேச வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நேசமணி அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் நேசமணியை கைது செய்து பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிறையில் போலீசார் அடைத்தனர்.
----
Related Tags :
Next Story