கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்


கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்
x
கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்
தினத்தந்தி 27 Nov 2021 9:34 PM IST (Updated: 27 Nov 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பெரியணை, வடக்கலுர், அரியாபுரம், பள்ளிவிளங்கால், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டிற்கு உட்பட்ட 5 வாய்க்கால்களில் முதல் போக பாசனத்திற்கு கடந்த மே மாதம் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் நடைபெற்றது.

இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கால்வாய் தூர்வாராமல் புதர்மண்டி கிடப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து தற்போது பொதுப்பணித்துறை மூலம் பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி, உதவி பொறியார் கார்த்திக் கோகுல் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கால்வாய்கள் தூர்வாரப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு பழைய ஆயக்கட்டிற்கு உட்பட்ட 5 கால்வாய்களும் மொத்தம் 63 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கால்வாய்கள் புதர்மண்டி கிடந்ததால் கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
 வடக்கலூர், காரப்பட்டி, அரியாபுரம் கால்வாய்களில் 95 சதவீத பணிகளும், பெரியணை கால்வாயில் 80 சதவீத பணிகளும் நிறைவடைந்து உள்ளது. மேலும் பள்ளிவிளங்கால் கால்வாயில் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. மழையின் காரணமாக கால்வாயில் தண்ணீர் நிற்பதால் தூர்வாரும் பணி தாமதமாகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story