நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 7,800 கன அடி உபரிநீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 535 கன அடியாக இருந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 7 ஆயிரத்து 832 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 300 கனஅடி உபரி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி உபரி நீரும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடிக்கிறது. உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story