தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 28 Nov 2021 2:32 AM IST (Updated: 28 Nov 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

ரெயில் பயணிகள் அவதி
ஈரோடு வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் கேரள மாநிலத்தில் இருந்து சென்னை மார்க்கமாக ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகள் ஏறி, இறங்குவதற்காக சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. தற்போது டிஜிட்டல் அறிவிப்பு பலகையும் செயல்படாமல் உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது பெட்டியை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்டியின் பெயர் அறிவிக்கப்படும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.

பள்ளி அருகே பன்றி கூட்டம் 
அந்தியூர் அருகே சந்தியபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பள்ளிக்கூட பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் முகம் சுழிக்கிறார்கள். மேலும் மாணவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பள்ளி அருகே சுற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், சந்தியபாளையம்.

தேங்கி கிடக்கும் குப்பை 
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கேசரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை முனியப்பன் கோவில் பகுதியில், குடியிருப்புகள் உள்ள இடத்தில் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவார்களா?
ஊர்ப்பொதுமக்கள், கேசரிமங்கலம்.

ஒளிராத மின்விளக்கு
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக இந்த விளக்கு ஒளிர்வதில்லை. அருகே போலீஸ் நிலையமும் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் நிலையத்துக்கும் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை  அதிகாரிகள் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஊர்பொதுமக்கள், காஞ்சிக்கோவில். 

வேகத்தடை வேண்டும்
அந்தியூரில் இருந்து பவானி செல்லும் சாலையில் செம்புளிச்சாம்பாளையம் மற்றும் சின்ன பருவாச்சி பிரிவில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த 2 இடங்களிலும் விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும். 
அய்யாசாமி, சேத்துனாம்பாளையம். 

சாலை அமைக்கப்படுமா?
நம்பியூர் அருகே உள்ள கொளந்தபாளையத்தில் இருந்து பூசாரிபாளையம் செல்லும் பாதையில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜல்லிகள் கொண்டு வந்து போட்டார்கள். அதன்பின்னர் எந்த பணியையும் தொடங்கவில்லை. இப்போது அந்த பாதையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இனியாவது அங்கு விரைந்து தார்சாலை அமைப்பார்களா?
ஊர்பொதுமக்கள், கொளந்தபாளையம். 

குடிநீர் பிரச்சினை
ஈரோடு மோசிக்கீரனார் வீதி, ரங்கநாதன் வீதி, மாதவ கிருஷ்ணாவீதி ஆகிய பகுதிகளில் தற்போது ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. எனவே பணிகளை விரைந்து முடித்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வாகனங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
அன்புதம்பி, ஈரோடு.

பாராட்டு
ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் உள்ள பாதாள சாக்கடை சரியாக மூடப்படாததால் குழி ஏற்பட்டு இருந்தது. மேலும் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரும் வெளியேறிக்கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சரிசெய்து குழியை மூடி விட்டனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்.

Next Story