சிவகிரி பகுதியில் அவலம்: விசைத்தறியை உடைத்து பழைய இரும்பு கடையில் போடும் நெசவாளர்கள்


சிவகிரி பகுதியில் அவலம்: விசைத்தறியை உடைத்து பழைய இரும்பு கடையில் போடும் நெசவாளர்கள்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:42 AM IST (Updated: 28 Nov 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் விசைத்தறியை உடைத்து நெசவாளர்கள் பழைய இரும்பு கடையில் போடும் அவலம் நேர்ந்துள்ளது.

சிவகிரி
சிவகிரி பகுதியில் விசைத்தறியை உடைத்து நெசவாளர்கள் பழைய இரும்பு கடையில் போடும் அவலம் நேர்ந்துள்ளது. 
விசைத்தறி
சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. வீடுகள் தோறும் குடிசை தொழிலாக இதை செய்து வருகிறார்கள். நூல் சுற்றுதல், கஞ்சி தேய்த்தல், பாவு ஓட்டுதல், பாவு பிணைத்தல் உள்ளிட்ட துணைத்தொழில்களில் குடும்பத்தினர் அனைவருமே ஈடுபட்டு வருமானம் ஈட்டி வந்தார்கள். 
இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அமலுக்கு வந்த 5 சதவிகித  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறு குறு விசைத்தறியாளர்கள் தொழிலை தொடரமுடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மாற்று தொழில்களுக்கு சென்று விட்டனர்.
எடைக்கு போடும் அவலம்
மேலும் ஆட்கள் பற்றாக்குறை, கட்டுப்படி ஆகாத கூலி, ஜவுளி விற்பனையில் தேக்கநிலை, வரலாறு காணாத நூல் விலை உயர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த பிரச்சினைகளால் விசைத்தறி தொழில் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
 இதனால் விசைத்தறியாளர்கள் தங்களது வீடுகளில் உள்ள விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்திவைத்திருந்தனர். 
இந்தநிலையில் வருமானத்துக்கு வழியின்றி விசைத்தறிகளை விற்க முயன்று வருகிறார்கள். ஆனால் அதையும் வாங்க ஆள் இல்லாததால் விசைத்தறியை உடைத்து சிவகிரியில் உள்ள பழைய இரும்பு கடையில் போட்டு பணம் வாங்கி செல்லும் அவலம் நேர்ந்து உள்ளது. 
தொழிலை காப்பாற்ற...
இதுகுறித்து நெசவாளர்கள் மற்றும் சிறு விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் கூறும்போது, 'பழைய இரும்பு வியாபாரிகள் விசைத்தறிகளை கிலோ 30 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை எடுத்துக்கொள்கிறார்கள். விசைத்தறிகள் சுமார் 750 கிலோ எடை வரை இருக்கும். அதை எடைக்கு போட்டால் 23 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தறிகளை 17 ஆயிரம் ரூபாய்க்கு பழைய இரும்பு கடையில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டும் வகையில் நவீனமான ஆட்டோலூம் தறிகளை இயக்கும் பயிற்சி அளித்து, மானிய விலையில் வழங்க வேண்டும். உற்பத்தியாகும் துணிகளை அரசே கொள்முதல்  செய்துகொள்ள வேண்டும்.  மத்திய அரசும், மாநில அரசும் கவனம் செலுத்தினால் மட்டுமே விசைத்தறி தொழிலை காப்பற்ற முடியும் என்றார்கள்.

Next Story