ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் கைது; 25 வாகனங்கள் மீட்பு
ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 வாகனங்கள் மீட்கப்பட்டன.
ஈரோடு
ஈரோட்டில் பிரபல இருசக்கர வாகன கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 வாகனங்கள் மீட்கப்பட்டன.
தனிப்படை அமைப்பு
ஈரோடு டவுன் போலீஸ் உட்கோட்டத்துக்கு உள்பட்ட டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, அரசு ஆஸ்பத்திரி ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரே நபர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி செல்வது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றப்பிரிவு போலீசார் இரவு ரோந்தினை தீவிரப்படுத்தினர்.
ஆட்டோ டிரைவர்
இந்த நிலையில் டவுன் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிரைவர் உடையில் மொபட்டில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேர்முட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான காக்கிச்சட்டை என்கிற முருகேசன் (வயது 47) என்பதும், தற்போது அவர் ஈரோடு சாஸ்திரி நகர் பாப்பாங்காட்டில் வசித்து வருவதும், அவர் ஓட்டி வந்த மொபட் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
கைது
மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் உருவமும், பிடிபட்ட முருகேசனின் உருவமும் ஒரே மாதிரி இருந்ததும் தெரியவந்தது. ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியில் விற்பனை செய்வதையும் முருகேசன் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் 25 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
Related Tags :
Next Story