உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஊக்கத்தொகை
ஈரோடு மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து பின்னர் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வி, பிறஉயர் கல்விப்படிப்பு ஆகிய ஏதேனும் உயர் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு ரூ.500 வீதம் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக மாநில தொழிலாளர் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான ஊக்கத்தொகை பெற தகுதி உள்ள ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் முன்னர் படித்த மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு பயிற்சி மையம்
அதன்படி தாங்கள் படித்த சிறப்பு பயிற்சி மையத்தின் பெயர், சிறப்பு பயிற்சி மையத்தில் படித்த வகுப்பின் விவரம், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் 2 புகைப்படத்தோடு ஒருவாரத்துக்குள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 6-வது தளம், ஈரோடு-638011 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
முன்னர் படித்த அல்லது தற்போது செயல்பாட்டில் இல்லாத இந்த திட்ட சிறப்பு பயிற்சி மையத்தின் விடுபட்ட மாணவ -மாணவிகளும் விண்ணப்பம் அளிக்கலாம். இதேபோல், தற்போது செயல்பாட்டில் உள்ள 15 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மையங்களின் பயிற்றுனர்கள், எழுத்தர்கள் அல்லது தொழிற்கல்வி பயிற்றுனர்கள் மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story