பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி


பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 27 Nov 2021 10:37 PM GMT (Updated: 27 Nov 2021 10:37 PM GMT)

பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி

பெத்தநாயக்கன்பாளையம், நவ.28-
ஆத்தூர் அருகே தொடர் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கராத்தே மாஸ்டர் மற்றும் பள்ளி தாளாளர் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது ெசய்தனர்.
பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் ஞானதீபம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 
இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் இருந்த போது, பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஒருவேளை அதில் பிழைத்து கொண்டால் என்ன செய்வது என்று கருதி அங்கிருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது மாணவி வலியால் துடித்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டனர். பின்னர் அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பாலியல் சீண்டல்
இருந்தபோதிலும் மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அவருக்கு பல்வேறு கவுன்சிலிங் அளித்த பின்னரே நேற்று முன்தினம் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளாக அவர் படித்து வந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 46) என்பவர் தியான பயிற்சி வகுப்பு என்ற ெபயரில் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, அந்த மாணவி 8-ம் வகுப்பு படிக்கும் போது, அந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக வந்த ராஜா அப்போதே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். முதலில் தவறாக அந்த மாணவி கருதாத நிலையில், ராஜாவின் அத்துமீறல் தொடரவே அப்போதே பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம்  இது தொடர்பாக புகார் கூறி உள்ளார். ஆனால் அவர் மாணவியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
கராத்தே மாஸ்டர், தாளாளர் கைது
இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த கராத்தே மாஸ்டரின் அத்துமீறல் தொடர்கதையாகி உள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 
உடனடியாக இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் கருமந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கருமந்துறை போலீசார், மாணவியின் வாக்குமூலத்தை பெற்று விசாரணையை தொடங்கினார்கள். 
அதே நேரத்தில் இந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியதால் சம்பந்தப்பட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை ஊர் பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து நேற்று போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் ராஜா மற்றும் நடவடிக்கை எடுக்காத தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கருமந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.

Next Story