பூந்தமல்லியில் பலத்த மழையால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்தது


பூந்தமல்லியில் பலத்த மழையால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்தது
x
தினத்தந்தி 28 Nov 2021 9:46 AM GMT (Updated: 28 Nov 2021 9:46 AM GMT)

பலத்த மழையால் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால் போலீசார் தண்ணீரில் நின்றபடி வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் குடியிருப்புக்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது.

மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால் போலீசார் தண்ணீரில் நின்றபடியே வழக்குகளை விசாரித்து வருகின்றனர். ஆவணங்கள் நனையாமல் இருக்க பத்திரமாக மேஜை மீது அடுக்கி வைத்து உள்ளனர். அதிக அளவில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் தேங்கி இருப்பதால் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வழக்கு விசாரணைக்காக வருபவர்களை தண்ணீர் வடிந்த பிறகு வரும்படி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், நகராட்சி கமிஷனர் நாராயணன், நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் மழைநீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேக்ஸ்வொர்த் நகர், ராமமூர்த்தி நகர், ராதாகிருஷ்ணன் நகர், சபாபதி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதால் தரைதளத்தில் வசிப்பவர்கள் மாடி வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழைநீர் சூழ்ந்து இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மின் மோட்டார்கள் வைத்து வெளியேற்றினாலும் தொடர் மழையால் மீண்டும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதி கோபாலபுரம், கோவில்பதாகை, மிட்டனமல்லி, ஆவடி - பூந்தமல்லி சாலை, பருத்திப்பட்டு, வசந்தம் நகர், கன்னிகாபுரம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடி பகுதியில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய் பகுதிகள் மற்றும் கன்னம்பாளையம் கூவம் ஆற்றின் தடுப்பணையில் உள்ள வெள்ள நீர் வடிகால் பகுதிகளையும், மழைநீர் வெள்ளம் புகுந்த சேக்காடு அடுக்குமாடி குடியிருப்பு, பருத்திப்பட்டு விவேகானந்தா பள்ளி அருகே உள்ள மழைநீர் தேங்கி உள்ள இடங்களை அமைச்சர் நாசர் பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் மகேஷ், ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி உடன் இருந்தனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர், அமுதம் நகர் மற்றும் அதன் அருகேயுள்ள வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்பதுடன் வீடுகளிலும் புகுந்தது.

இரும்புலியூர் பழைய ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. மழைநீரில் சிக்கிய மக்களை தாம்பரம் தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். நேற்று ஒரே நாளில் இரும்புலியூர் குடியிருப்பு பகுதியில் சிக்கி தவித்த பொதுமக்கள் 59 பேரை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் மூலம் தாம்பரம் தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தாம்பரம் கிருஷ்ணா நகர், சக்தி நகர், டி.டி.கே நகர், பாரதி நகர், கண்ணன் அவென்யூ, குட்வில் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

மழைநீரால் பாதிக்கப்பட்ட செம்பாக்கம், டி.டி.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு காச நோய் ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆஸ்பத்திரியில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பம்மலில், அண்ணா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, லட்சுமி நாராயணா நகர், காந்தி ரோடு, சிக்னல் ஆபீஸ் சந்திப்பு, மூங்கில் ஏரி, பிரசாந்தி நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் அதிகமான குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. அனகாபுத்தூரில் பாலாஜி நகர், பாண்டியன் தெரு, பாரி நகர், அன்னை பில்டர்ஸ், திருநகரிலும், திருநீர்மலையில் வி.ஜி.என். குடியிருப்பு, ரங்கா நகரிலும் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

Next Story