தடைசெய்த போதை பொருட்கள் விற்பனை ஜோர்
தடைசெய்த போதை பொருட்கள் விற்பனை ஜோர்
வால்பாறை,
வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஒருசில மளிகை கடைகள் உள்பட பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக்போன்ற புகையிலை பொருட்கள் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வால்பாறை வட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதிகளவில் புகையிலை பொருட்கள் விற்பனை வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் முற்றிலுமாக இந்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை பல்வேறு தரப்பினரும் தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தரக்கூடிய இந்த புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒருசில குறிப்பிட்ட கடைகளில் கிடைக்கும் என்பதை இந்த புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான வெளிமாநிலத்தவர்கள் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு வரத் தொடங்கியதற்கு பிறகு இந்த புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக பெட்டிக்கடைக்கார்கள் தெரிவிக்கின்றனர். வெளிமாநிலத்தவர்கள் எஸ்டேட் பகுதிகளில் உள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், அதனால் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
வால்பாறையில் இந்த புகையிலை பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு கொடிய நோய்கள் தாக்குவதற்கும் காரணமான புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார், சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் கூட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
ஆழியாறு, அட்டகட்டி பகுதியில் உள்ள வனத்துறையின் சோதனை சாவடிகளில் இதற்கென தனிப்படை அமைத்து வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் வால்பாறைக்கு கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாத வால்பாறையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.
Related Tags :
Next Story