அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழைக்கு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழனி- கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கனமழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. திண்டுக்கல்லில் நேற்று பகலில் சுமார் 1 மணிக்கு மழை பெய்தது. அந்த மழை சிறிது நேரம் நீடித்தது. அதன் பின்பு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேல் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக போளூர் கிராமத்தின் அருகே உள்ள புலவச்சி ஆறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையறிந்த சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியின் அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல அப்பகுதியிலுள்ள கூக்கால் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவி வருகிறது. வார விடுமுறைையயொட்டி சுற்றுலா பயணிகள் வருகை மழையின் காரணமாக குறைந்து காணப்பட்டது.
மரம் விழுந்தது
பழனி பகுதியில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பழனி முருகன் கோவிலுக்கு வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்து பழனியில் சாமி தரிசனம் செய்தனர். மழையால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த மழையின் காரணமாக பழனி பட்டாலியன் போலீஸ் கேம்ப் அருகே தாராபுரம் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. சவரிக்காடு அருகே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்பு அந்த மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.
2 வீடுகள் இடிந்து விழுந்தது
மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்கு சாணார்பட்டி அருகேயுள்ள திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளபட்டியை சேர்ந்த செல்வி மற்றும் வடுகபட்டியை சேர்ந்த பிரான்சிஸ்மேரி ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். சேதமடைந்த வீடுகளை கம்பிளியம்பட்டி வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், திம்மணநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன், கிராம உதவியாளர் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். சாணார்பட்டி அருகே உள்ள சந்தானவர்த்தினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜாக்காப்பட்டி அருகே சின்னையாபிள்ளை குளம், கலர்குளம், சிறுகுளம் ஆகியவற்றிக்கு தண்ணீர் செல்வதற்காக ஆற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.
மழையின் காரணமாக வேடசந்தூர் அருகே உள்ள கருப்பத்தேவனூர் அருகே குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் குடகனாற்றை கடந்து சென்றனர்.
Related Tags :
Next Story