தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை-அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
திருப்பரங்குன்றம்,
தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அகழாய்வு
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
தொல்லியல் துறை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார். அகழாய்வு பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் .புதிய இடங்களில் அகழாய்வுபணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கீழடியில் 7-ம் கட்டஅகழாய்வு பணி முடிவுற்ற நிலையில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடர்ந்து நடத்துவதற்கும், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. கொற்கையில் கடல் ஆய்வுகள் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாணை
மாமன்னர் ராஜேந்திர சோழன் படையெடுப்பு வாயிலாக வெற்றி பெற்றுள்ள பல்வேறு இடங்களுக்கு தொல்லியல் துறையினர் சென்று ஆவணப்படுத்தி வரலாற்றுத்தடயங்களை கண்டறியப்படும். சங்ககாலத்துறை முகமாக இருக்கக்கூடிய முசிறியில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுத் துறையில் புதிய படைப்புகளை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.தொல்லியல் துறையும், அருங்காட்சியதுறையும் இணைந்து உருமாற்றம்செய்யப்பட்டுள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில் உலகத்தரம் வாய்ந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் தொன்மை நாகரீகம், கட்டமைப்பு உருவாக்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டவரைவு அறிக்கையை தயாராக உள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை விரைவில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தொல்லியல் சின்னங்கள் கிடைக்கக்கூடிய பகுதியில் குவாரி பணிகள் நடைபெற கூடாது என கடுமையான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.புராதன சின்னங்களை தொல்லியல்துறை பாதுகாக்கும்.
மாநாடு
சென்னை, கோவையில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றுள்ளது. இதேபோல மற்ற பெருநகரங்களிலும் முதல்-அமைச்சர் அனுமதி பெற்று படிப்படியாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். சென்னை, கோவையில் மாநாடுநடைபெற்று இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சமச்சீர் தொழில்வளர்ச்சி காணக் கூடிய அளவில் செயல்பாடுகள் இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story