வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை; சத்தியமங்கலத்தில் பரபரப்பு
வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்
வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடம் விற்பனை
சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 60), நாகராஜ் (58), தங்கவேலு (56), சுப்பிரமணி (54). இவர்கள் 4 பேரும் அண்ணன்- தம்பிகள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான 2.8 ஏக்கர் விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிலத்தை நடராஜ், நாகராஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது அவர்களுடைய மற்ற தம்பிகளான தங்கவேலு மற்றும் சுப்பிரமணிக்கு தெரியாது எனவும் தெரிகிறது.
முற்றுகை போராட்டம்
அந்த இடத்தை வாங்கியவர் மற்றும் சிலர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அங்கு வந்து உள்ளனர். பின்னர் தங்கவேலு, சுப்பிரமணி ஆகியோரை வெளியேற கூறியதுடன், அவர்களுடைய வீடுகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தங்கவேலு, சுப்பிரமணி ஆகியோர் புகார் அளித்தனர். இந்த நிலையில் இடத்தை வாங்கியவர் மற்றும் சிலர் மீண்டும் நேற்று முன்தினம் வந்து தங்கவேலு, சுப்பிரமணி ஆகியோர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை, சேதப்படுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களான தங்கவேலு, சுப்பிரமணி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் உட்கார்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வீடு மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். அதற்கு பதில் அளித்து போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story