ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை


ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 29 Nov 2021 2:41 AM IST (Updated: 29 Nov 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு பணி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் தினந்தோறும் டெங்கு தடுப்பு பணிகளான கொசு மருந்து தெளிப்பு, ஏடிஸ் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
எனினும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 8 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
8 பேருக்கு காய்ச்சல்
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளும், டெங்கு தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் மக்களுக்கு தண்ணீர் மூலம் பரவும் நோய் பாதிப்புகளான காய்ச்சல், சளி போன்றவை ஏற்படுகிறது. இதில், 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு டெங்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தீவிர காய்ச்சலால் தற்போது 8 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், டெங்கு காய்ச்சலா? அல்லது கொரோனா பாதிப்பா? என்பது உறுதி செய்யப்படவில்லை. மழை காரணமாக மாநகர் பகுதியில் வாரத்திற்கு 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் இருப்பிடத்தை சுற்றியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளான கொசு மருந்து தெளிப்பு, ஏடிஸ் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் இருந்து மட்டுமே உற்பத்தியாகிறது. அதனால், வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் குடிநீர் தொட்டிகள், தண்ணீர் குடங்கள் மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் முதல் கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறோம். 2-வது முறையும் அலட்சியமாக இருந்தால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story