மழைநீர் சூழ்ந்துள்ள பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் கமிஷனர் ஆய்வு
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று மாலை மழைநீர் சூழ்ந்துள்ள பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் மழை காரணமாக பூந்தமல்லி அம்மன் கோவில் தெருவில் உள்ள பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், அதன் வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. 2 நாட்களாகியும் மழைநீர் வெளியேற்றப்படாததால் போலீசார் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று மாலை மழைநீர் சூழ்ந்துள்ள பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தேங்கி இருந்த மழைநீரில் நடந்து சென்று போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததுடன், நிவாரண பொருட்களையும் வழங்கினார். அப்போது போலீசாரின் குடும்பத்தினர், “2 நாட்களாகியும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர் மழையால் மேலும் மழைநீர் சூழ்ந்து வருவதால் வீட்டில் வசிக்க முடியவில்லை. விரைந்து மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மழைநீரை உடனடியாக அகற்றும்படி கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
பின்னர் குன்றத்தூர் போலீஸ் நிலையம் மற்றும் அங்குள்ள போலீஸ் குடியிருப்பிலும் போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story