தொடர் மழையால் கடம்பூர், விளாத்திகுளம் பகுதியில் 2,800 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன


தொடர் மழையால் கடம்பூர், விளாத்திகுளம் பகுதியில் 2,800 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன
x
தினத்தந்தி 29 Nov 2021 6:13 PM IST (Updated: 29 Nov 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் கடம்பூர், விளாத்திகுளம் பகுதியில் 2,800 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன

கயத்தாறு:
தொடர் மழையால் கடம்பூர், விளாத்திகுளம் பகுதியில் 2,800 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை வடிய வைக்கும் பணியில் பொதுமக்கள், விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மானாவாரி விவசாய பூமியான கடம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் விவசாய நிலங்களில் குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுக தொடங்கின.
2,800 ஏக்கர் பயிர்கள் சேதம்
கடம்பூர், திருமலாபுரம், தங்கம்மாள்புரம், ஒட்டுடன்பட்டி, குப்பனாபுரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அழுகி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதேபோன்று விளாத்திகுளம், கே.சுப்புலாபுரம், காடல்குடி, மல்லீஸ்வரபுரம், லட்சுமிபுரம், மிட்டாவடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் அழுகின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
நிவாரண உதவி வேண்டும்
மானாவாரி விளைநிலமான விளாத்திகுளம் பகுதியில் ஏற்கனவே இருமுறை விதைத்தும், பருவமழை பெய்ய தாமதமானதால் விதைகள் வீணானது. தற்போது 3-வது முறையாக விதைத்த நிலையில், தொடர்மழையால் பயிர்கள் அழுகி வீணானது. 
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. அனைத்து ஓடைகளிலும், வடிகால்களிலும் தண்ணீர் நிரம்பி செல்வதால், விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. பல நாட்களாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுகி சேதமடைந்தன.
பெரும்பாலான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உடனே நிவாரண உதவி வழங்க வேண்டும். அனைத்து ஓடைகள், வடிகால்கள் போன்றவற்றை முறையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர்மல்க வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story