காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சிகளில் சமூக வல்லுனர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சிகளில் சமூக வல்லுனர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 6:44 PM IST (Updated: 29 Nov 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரிய தொழில்சார் சமூக வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக வல்லுனர்கள் தேர்வு

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் ஆகிய 2 வட்டாரங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் தொழில் சார்ந்த நிறுவன செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு சமூக வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பெண்களுக்கான....

விண்ணப்பதாரர்கள் அதே ஊராட்சியில் வசிக்கும் பெண்களாக இருக்க வேண்டும். 25 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் வணிக நிர்வாகம், வங்கியியல், வர்த்தகம், சமூக பணி, வேளாண்மை, உணவு அறிவியல், பால் பண்ணை ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். ஆன்ட்ராய்டு கைப்பேசியில் பயன்பாட்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வாழ்வாதாரம் மற்றும் நிறுவன செயல்பாடுகளில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மக்கள் அமைப்புகளில் எந்தவொரு பொறுப்புகளில் இல்லாதவராகவும், உள்ளாட்சியில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மாதத்திற்கு அதிக பட்சமாக 20 நாட்களுக்கான பணிகளுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.250 மதிப்பூதியம் வழங்கப்படும். இவர்களின் பணி அளவுகோளின்படி மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஊக்க தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை சமர்பிக்க

காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிக்கும் விருப்பமுள்ளவர்கள் புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அணித் தலைவர் அலுவலகத்திலும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிக்கும் விருப்பமுள்ளவர்கள் முத்தியால்பேட்டை ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அணித் தலைவர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமர்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story