10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் கோவை கோர்ட்டில் சரண்
10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் கோவை கோர்ட்டில் சரண்
கோவை
2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஆர்.கே.ஈமு பார்ம்ஸ் பவுல்ட்ரி நிறுவனம், வாடிக்கையாளர் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறினர். அதனை நம்பி அந்த நிறுவனத்தில் பலர் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்த படி வட்டியை தராமல் நிறுவனம் ஏமாற்றியதாக பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், அந்த நிறுவனம் 110 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 300 மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கியபோது நிறுவன உரிமையாளர்கள் மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகிய இருவர் ஆஜராகாததால், இருவருக்கும் எதிராக வாரண்ட் பிறப்பித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இருவரும் நேற்று கோவை முதலீட்டாளர் கோர்ட்டில் சரணடைந்தனர். இதனையடுத்து இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.60 லட்சத்து 50 ஆயிரம்என மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டதை நீதிபதி தெரிவித்தார். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story