பூண்டி ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 8:37 PM IST (Updated: 29 Nov 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

12 ஆயிரம் கனஅடி தண்ணீர்

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியின் பரப்பளவு 34.58 சதுர கி.மீ. ஆகும். இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகமானது. நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர் மட்டம் 34.07 அடியாக பதிவானது. 2.857 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் 3, 4, 5, 11, 12, 13, 14 எண்கள் கொண்ட மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆறு கரையோர கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைபாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர்,

பண்டிக்காவநூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story