அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு


அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 29 Nov 2021 3:37 PM GMT (Updated: 29 Nov 2021 3:37 PM GMT)

அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பணிநிரந்தரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அரசு மினி கிளினிக் டாக்டர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மருத்துவ சேவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான டாக்டர்கள் ஒப்பந்தம் அடிப்படையிலும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அரசு மினி கிளினிக் டாக்டர்களை கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் உத்தரவின் கீழ் மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்), மாவட்ட இணை இயக்குனர்கள் மூலமாக நடந்த நேர்முக தேர்வில் தேர்ந்தெடுத்தார்கள். இந்த முறையில் தேர்வான நாங்கள் கொரோனா, மழை என அனைத்து சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். மேலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசி முகாம் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம். எனவே ஒப்பந்த முறையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களை காலிப்பணியிடங்களின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
ஆக்கிரமிப்பு
தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தாளவாடியில் ஓசூர் ரோட்டில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பொது வழித்தடத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதுதொடர்பாக தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பிறகு அதிகாரிகள் விசாரணை நடத்தி பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து, வழித்தடத்தில் யாரும் செல்லக்கூடாது என்று மிரட்டி வருகிறார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
ஊதியம்
நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கொடுத்த மனுவில், “கெட்டிச்செவியூர் ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தினமும் ரூ.100 சம்பளம் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்கிறோம். எனவே விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம் குறித்து கலெக்டரின் செயல்முறை ஆணை கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை வழங்கப்பட வேண்டிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு மாநகராட்சியில் ரூ.693, நகராட்சியில் ரூ.578, பேரூராட்சியில் ரூ.501, ஊராட்சியில் ரூ.424 ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதேபோல் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். இந்த ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
285 மனுக்கள்
பெருந்துறை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எக்கட்டாம்பாளையம் கிராமம் அய்யம்பாளையத்தில் ஆண்டிக்காட்டுக்குளம் உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பாசனத்துக்கு உதவியாக இருந்தது. குளத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக குளத்தின் கரைகள் உடைக்கப்பட்டதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 285 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--------

Related Tags :
Next Story