பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்


பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்
x
தினத்தந்தி 29 Nov 2021 3:49 PM GMT (Updated: 29 Nov 2021 3:49 PM GMT)

ஈரோடு-பெருந்துறை ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.

ஈரோடு-பெருந்துறை ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகளை டவுன் பஸ் டிரைவர்கள் அவமதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.
இலவச பஸ்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பதாகும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களில் செல்லும் பெண் பயணிகளுக்கு கட்டணம் இல்லை என்ற இந்த அறிவிப்பின் படி தனியார் துறை நிறுவனங்களில் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பெண்கள், போக்குவரத்துக்காக தங்கள் வருவாயில் பெரும்பகுதியை செலவு செய்யும் சிரமம் குறையும் என்பதே இதன் நோக்கமாகும்.
பெண்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இலவச பஸ் பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இது பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவை அளித்து உள்ளது. அதுமட்டுமின்றி, தினசரி எத்தனை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இந்த திட்டத்தால் பயன்பெறுகிறார்கள் என்பதை கண்டறியவும், அவசியமின்றி இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் பயணிகளுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கும் நடைமுறையும் உள்ளது.
புகார்
இந்தநிலையில் ஈரோட்டில் சில டவுன் பஸ் டிரைவர்கள் பெண் பயணிகள் நிற்கும் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் செல்வதாக புகார்கள் எழுந்து உள்ளன. இதுபற்றி ஈரோடு திண்டல் வித்யா நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறியதாவது:-
எனது மகள் கல்லூரிக்கு சென்று வருகிறார். தினமும் அவர் அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில் பயணம் செய்வது வழக்கம். இதற்காக திண்டல் மேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக திண்டல் மேடு பஸ் நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்கள் நிறுத்தாமல் சென்று வந்தன. நன்றாக கவனித்தபோது பஸ் நிறுத்தத்தில் பெண் பயணிகள் அதிகமாக நின்று கொண்டு இருந்தால் பஸ்களை நிறுத்தாமல் செல்வதும், ஆண் பயணிகள் நின்று கொண்டிருந்தால் நிறுத்துவதும் தெரிந்தது.
அவமதிப்பு
இதனால் 2 நாட்களாக இன்னொரு பஸ் நிறுத்தத்துக்கு சென்று மகளுடன் காத்திருந்தபோது, அந்த நிறுத்தத்தில் பயணிகள் இறங்க வேண்டியது இருப்பதால் நிறுத்துவதும், பெண்கள் ஏறினால் அவமதித்து பேசுவதும் தெரிந்தது.
அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணிடம் கேட்டபோது, இந்த வழியாக செல்லும் பல டவுன் பஸ்கள் இப்படித்தான் பெண்களை அவமதிக்கிறார்கள். நாம் நிறுத்தச்சொல்லும் இடத்தில் நிறுத்துவது கூட இல்லை. ஆண்கள் இறங்க வேண்டியது இருந்தால் மட்டுமே நிறுத்துகிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறினார்.
இதுபோல் ஈரோட்டில் டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் செய்வதால் பயணிகள் அரசுக்கு எதிராக உள்ளனர். கல்லூரி செல்பவர்கள், வேலைகளுக்கு செல்பவர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமலும், பஸ் தாமதம் காரணமாக மன அழுத்தமும் ஏற்படுகிறது. பெண்கள் அதிக அளவில் தனியார் பஸ்கள் அல்லது ஷேர் ஆட்டோக்களில் மட்டுமே செல்லும் நிலையும் ஏற்படுகிறது. எனவே அரசும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசின் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் சரியாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story