தினத்தந்தி புகாா் பெட்டி செய்தி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சாக்கடை வடிகால் வேண்டும்
அந்தியூர் அருகே சின்னதம்பிபாளையம் அருகே உள்ள கிராமம் புதுமேட்டூர். எங்கள் கிராமத்தில் சாக்கடை வசதி இல்லை. இதனால் ரோட்டின் ஓரத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், புதுமேட்டூர்.
சாலை செப்பனிடப்படுமா?
சென்னிமலை அருகே குளத்துப்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள பெருந்துறை ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல சிறுவர், சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்கவும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பார்த்திபன், சென்னிமலை.
ஆபத்தான மின் கம்பம்
சென்னிமலை ஒன்றியம் கூத்தம்பாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் உடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. அந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம். அந்த அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு எலும்புக்கூடாக காட்சி அளிக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தகுமார், ஆலாம்பாளையம்.
திடீர் பள்ளம்
ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நடந்தோ, வாகனங்கள் செல்லவோ முடியவில்லை. மேலும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த திடீர் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அருள்மணி, ஈரோடு
கழிப்பிடம் சுத்தம் செய்யப்படுமா?
ஆப்பக்கூடல் முருகன் கோவில் அருகே கழிப்பிடம் உள்ளது. இது பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்பு உள்ளது. கழிப்பிடத்தை தினமும் 2 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
எம்.பாலசுப்ரமணியன், சக்தி நகர், ஆப்பக்கூடல்.
தேங்கும் கழிவுநீர்
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் வீடுகளின் அருகில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தேங்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், சாக்கடை வடிகால் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பொம்மன்பட்டி.
Related Tags :
Next Story