தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தெருநாய்கள் தொல்லை
கோவையில் உக்கடம், ராமநாதபுரம், மதுக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனங் களில், வீடு திரும்புபவர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவழகன், கோவை.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கோவையில் இருந்து பேரூர் செல்லும் வழியில் செல்வபுரம் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சி யளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர் கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
சோமசுந்தரம், செல்வபுரம்.
சீரான குடிநீர் வினியோகம்
கோவை மாநகரில் ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் வழங்கும் விதம் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில பகுதிகளில் 6 நாட்களுக்கு ஒரு முறையும் சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை என்று மாறுபட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக போத்தனூர், குறிச்சி, கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களுக்க ஒருமுறை குடிநீர் வழங்குவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
சாகுல்ஹமீது, போத்தனூர்.
சாலையில் ஆபத்தான குழி
கோவை மசக்காளிபாளையம் ஆலமரம் அருகில் சில வாரங் களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள சாலை தோண்டப்பட்டு குழாய் சரிசெய்யப்பட்டது. ஆனால் அந்த குழியை சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் தற்போது சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளதுடன், சாலையின் நடுவே உள்ள அந்த குழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே ஆபத்தான முறையில் இருக்கும் அந்த குழியை உடனே சரிசெய்ய வேண்டும்.
அசோக்குமார், மசக்காளிபாளையம்.
சாக்கடை கழிவுநீரால் அவதி
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செல்லும் மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுடன் சேர்ந்து மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
ரவிக்குமார், கிணத்துக்கடவு.
நிழற்குடை வேண்டும்
கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன் புதூரில் இருந்து மூலக்கடை செல்லும் வழியில் மாலகோவில் பகுதி பஸ்நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் காத்திருக்க நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் காத்திருக்கும்போது கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மழை பெய்யும்போது அருகில் உள்ள கடைகளை தேடி ஓடும் நிலையும் நீடித்து வருகிறது. எனவே அங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
முருகன், சிங்கையன்புதூர்.
ஆபத்தான பள்ளம்
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை இதுவரை மூடவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
ஆனந்தன், காந்திபுரம்.
பழுதடைந்த பள்ளி கட்டிடம்
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் வழியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் ஒரு கட்டிடம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய மோசமான நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
பாம்புகளால் பொதுமக்கள் அவதி
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மணியகாரர்நகரில் குடியிருப்பு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இது போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. எனவே பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த நிலத்தில் புதர்கள் வளர்ந்து உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.
மணிகண்டன், மணியகாரர் நகர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை கண்ணப்பநகர், காந்திஜி ரோட்டில் குப்பைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. அவை சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அத்துடன் குப்பைகளை தெருநாய்கள் கடித்து இழுத்து சாலையில் போடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
குமார், கண்ணப்பநகர்.
தெருவிளக்குகள் இல்லை
இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் வீதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இரவில் குழந்தைகள் வெளியே செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு தெருவிளக்குகள் வசதி செய்து கொடுக்க வேண்டும். முருகேசன், கிருஷ்ணாபுரம்.
Related Tags :
Next Story