இரவில் சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த போலீஸ்காரர்


இரவில் சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:33 AM IST (Updated: 30 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் பறித்ததும் தெரியவந்தது.

மதுரை,

சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் பறித்ததும் தெரியவந்தது.
இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சினிமா பார்த்து திரும்பிய இளம்பெண்

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 45 வயதானவர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ஒரு இளம்பெண் உள்பட 5 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சினிமா பார்க்க கடை உரிமையாளர், தனது கடை ஊழியர்கள் அனைவருடன் செல்லூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றார். அங்கு சினிமா முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு அந்த இளம்பெண்ணை வீட்டில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கடைக்காரர் அழைத்து வந்தார். அவர் நேதாஜி ரோடு வழியாக வில்லாபுரம் செல்வதற்காக சென்ற போது அங்கு ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர்.
அப்போது ஒரு போலீஸ்காரர், கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்? நீங்கள் இருவரும் யார்? என்று கேட்டுள்ளார். அப்போது அவர் தனது கடையில் வேலை பார்ப்பவர்களுடன் சினிமாவுக்கு சென்று வருவதாக கூறி அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து காண்பித்துள்ளார். 
பின்னர் அந்த போலீஸ்காரர் கடை உரிமையாளரை தனியாக அழைத்துச்சென்று அந்த பெண் குறித்து முழுவிவரங்களை கேட்டுள்ளார். அப்போது 22 வயதான அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்களது பெற்றோருக்கு தெரிந்துதான் படம் பார்க்க சென்றதாகவும் போலீஸ்காரரிடம் தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம். கார்டு பறிப்பு

பின்னர், தன்னுடன் இருந்த போலீஸ்காரரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அந்த போலீஸ்காரர் மட்டும் கடை உரிமையாளரை தொடர்ந்து மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து 11 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்ஸ், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து அவரையும் விரட்டி அடித்துள்ளார்.
ஆனால் கடைக்காரர், அந்த பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்ட போது, நான் சென்று வீட்டில் பாதுகாப்பாக விட்டு விடுகிறேன் என்று போலீஸ்காரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடைக்காரர் அங்கிருந்து சென்ற பிறகு போலீஸ்காரர் அந்த பெண்ணிடம், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் விபசார வழக்குகளில் கைது செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த பெண், விட்டு விடுங்கள் என்று கெஞ்சி உள்ளார்.

கடத்திச்சென்று பலாத்காரம்

அதை தொடர்ந்து அந்த போலீஸ்காரர், அந்த இளம் பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று கூறி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே அந்த ெபண்ணின் வீட்டின் அருகே கடை உரிைமயாளர் நின்றிருந்தார். ஆட்டோவில் வந்து அந்த பெண் இறங்கிய பின்னர் தான் அவர் தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்காரர் சென்னைக்கு செல்ல இருந்ததால் தனது செல்போன், டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம்.கார்டை தருமாறு சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் கேட்டுள்ளார். அவரும் கிரைம்பிராஞ்ச் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு வரச்சொல்லி கடைக்காரரிடம் அனைத்தையும் கொடுத்துள்ளார்.

பணம் பறிப்பு 

அப்போது அவர் தனது செல்போனை பார்த்த போது, அதில் அவரது ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக வந்த குறுஞ்செய்தி கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீஸ்காரரிடம் கேட்ட போது, அவரை திட்டி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் நேற்று காலை அவர் கடைக்கு வந்த பிறகு, அந்த இளம்பெண் வேலைக்கு வராததை அறிந்தார். உடனே அந்த பெண்ணிற்கு போன் செய்த போது, அவரது பெற்றோர் கடைக்காரரை வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு அந்த பெண்ணிடம் பேசிய போது, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தன்னை மிரட்டி விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார்.
போலீசில் புகார்
இதனால் வேதனை அடைந்த கடைக்காரர் தனது நண்பரிடம் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் தெரிவிக்க ஆலோசனை வழங்கி உள்ளார். 
பின்னர் இது குறித்து திடீர்நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடைக்காரர் புகார் தெரிவித்தார். அப்போது அங்கிருந்து உதவி கமிஷனர் சம்பவம் குறித்து கேட்டறிந்து அந்த போலீஸ்காரர் யார்?என்று விசாரணை நடத்தினார். அவர் திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் முருகன் (வயது 35) என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் சம்பவம் நடந்த இடம் திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்குரியது என்று கூறி அங்கு சென்று புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.

கைது

இதற்கிடையே இது குறித்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு தெரியவந்தது. அவர் சம்பவம் குறித்து துணை கமிஷனர் தங்கத்துரையிடம் விசாரிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் முருகனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் மீது துறைரீதியான விசாரணை மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  வேலியே பயிரை மேய்ந்தது போல ஆகி விட்டதே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story