திருக்கழுக்குன்றம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சூராடிமங்கலம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலைமறியல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்டது சூராடிமங்கலம் கிராமம். இந்த பகுதியில் சுமார் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல பாதி தொலைவுக்கு சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. மீதி உள்ள தொலைக்கு வயலில் உள்ள வரப்பில் சிரமப்பட்டு நடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் உறவினர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்வதில் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதியினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலை வசதி ஏற்படுத்தி தரகோரி குரல் எழுப்பினர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம், நீண்டகாலமாக இந்த பகுதி மக்கள் வயல் வரப்பில்தான் சிரமத்துடன் உடலை சுமந்து செல்கிறோம். தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வயல்வெளியில் மழைவெள்ளம் தேங்கியுள்ளது. நேற்று இந்த பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி மாரியம்மாள்(வயது 52) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடியாமல் உள்ளோம். எனவே சுடுகாட்டிக்கு செல்ல சாலை வசதி உடனடியாக செய்துதர வேண்டும் என முறையிட்டனர். அவர்களிடம் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story