ஊட்டி, கோத்தகிரியில் சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி, கோத்தகிரியில் சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி
ஊட்டி, கோத்தகிரியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சுவர்கள் இடிந்து 11 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
சூறாவளி காற்றுடன் மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால், நகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல குடியிருப்புகள் இருளில் மூழ்கின.
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காராவில் மரம் முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் வாகன முகப்பு வெளிச்சத்தில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி சர்ச்ஹில் சாலையில் ராட்சத மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதேபோல ஊட்டி-மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் சாலையில் இருந்து மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
அதேபோல் ஊட்டி ஆர்.கே.புரம், ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதி, கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட இடங்களில் 9 மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை நெடுஞ்சாலையத்துறையினர் வெட்டி அகற்றினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி-சோலூர்மட்டம் சாலையில் பரவக்காடு என்ற இடத்தில் ராட்சத மரம் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி, பொக்லைன் மூலம் மரதுண்டுகளை அகற்றினர்.
இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதேபோல எஸ்.கைகாட்டி செல்லும் சாலையில் லாரியின் மீது மரம் விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து அந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது.
11 வீடுகள் சேதம்
தொடர் மழை காரணமாக ஊட்டியில் 4 வீடுகள், குன்னூரில் 3 வீடுகள், கோத்தகிரியில் ஒரு வீடு என மொத்தம் 8 வீடுகள் பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்திரலிங்கத்திற்கு நிவாரண தொகையான ரூ.4,100 -யை கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் வழங்கினார்.
இதே போல மார்வளா அருகே உள்ள அத்திக்கம்பை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரது வீடு மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.
வீடு இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் கூக்கல் தொரை கிராமத்திற்கு சென்று இருந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தகிரி ஹேப்பிவேலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சீத்தாதாஸ் (57) என்பவரது வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து அவருக்கு கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார், கிராம உதவியாளர் அறிவாகரன் ஆகியோர் நிவாரணமாக ரூ.4,100-யை வழங்கினர். ஊட்டி, கோத்தகிரியில் மழைக்கு மொத்தம் 11 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
கடும் குளிர்
ஊட்டி நகரில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. பனிமூட்டம் மற்றும் மழையால் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story