2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
கோவை
ஈரோடு மாவட்டம் மேட்டூர் சாலையில் கடந்த 2011-ம் ஆண்டில் ஜி-1 ஈமு ஜோன் இந்தியா என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த குரு என்கிற குருசாமி (வயது 31), இவருடைய மனைவி சுசிலா, கிரி முருகன், லிங்கசாமி ஆகிய 4 பேர் சேர்ந்து நடத்திவந்தனர்.
இவர்கள் இந்த நிறுவனத்தில் 2 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்தனர்.
அதில் பண்ணை திட்டத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு செட் அமைத்துக் கொடுத்தும்,5 ஈமு கோழிக்குஞ்சுகள் கொடுத்தும், தேவையான தீவனங்கள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்படும். மேலும் மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.7 ஆயிரம் மற்றும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.15,000 தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதேபோல் வி.ஐ.பி. என்ற திட்டத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் 5 ஈமு கோழிக் குஞ்சுகள் கொடுத்து அதை பண்ணையிலேயே பராமரித்தும், இதற்காக ரூ. 7,000 ஊக்கத்தொகை, வருட முடிவில் ரூ.15,000 வழங்கப்படும் என்றும் கூறி முதலீட்டாளர்களிடம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து உள்ளனர். இவ்வாறு 37 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 7,500-ஐ பெற்றுக்கொண்டு திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த கோவை லிங்கப்பா செட்டித் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடி செய்த குருசாமி மற்றும் கிரிமுருகன் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.72 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சுசிலா விடுதலை செய்யப்பட்டார். லிங்க சாமி கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே நேற்று குருசாமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.அரசு தரப்பில் வக்கீல் க.முத்து விஜயன் வாதாடினார்.
Related Tags :
Next Story