ஈரோட்டில் பரபரப்பாகும் தேர்தல் களம்


ஈரோட்டில் பரபரப்பாகும் தேர்தல் களம்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:52 PM GMT (Updated: 30 Nov 2021 3:52 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் விருப்பமனுக்கள் கொடுக்க அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் விருப்பமனுக்கள் கொடுக்க அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. மாவட்ட ஊராட்சிக்குழு முதல் கிராம ஊராட்சி மன்றங்கள் வரை மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் நிர்வாகத்துக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது.
எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தை அதிகாரிகளே பார்த்து வருகிறார்கள். இதனால் மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காண முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
உற்சாகம்
இந்தநிலையில் பிரபல அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை உற்சாகமாக தயார் செய்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து பணிகளை உற்சாகமாக தொடங்கி உள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கிராம ஊராட்சிகளில் கட்சி சின்னங்களில் யாரும் போட்டியிட முடியாது. இதனால் அங்கு கட்சிகளின் ஆதிக்கம் எப்படி உள்ளது என்பதை விட, தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கே வெற்றிக்கு வழி வகுப்பதாக இருக்கும்.
கட்சி சின்னங்கள்
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரை கவுன்சிலர்கள் அவரவர் சார்ந்து இருக்கும் கட்சி சின்னங்களில் போட்டியிட முடியும். எனவே இதில் வெற்றி தோல்வி என்பது கட்சிக்கான வெற்றி தோல்வியாக கருதப்படும். தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கட்சியை அந்தந்த பகுதிகளில் வலுவானதாக்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம் என்பதை உணர்ந்து போட்டிக்கு தயாராகி வருகின்றன.
இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் போட்டி களத்தில் உள்ளன. பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. என அந்தந்த கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கின்றன.
விருப்ப மனுக்கள்
இதை உறுதிப்படுத்துவதுபோல கட்சிகளில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுக்க கட்சி தலைமையிடங்கள் அறிவித்து உள்ளன.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பகுதியில் அரசியல் கட்சி அலுவலகங்கள் பரபரப்படைந்து உள்ளன. ஈரோடு மாநகராட்சி மட்டுமின்றி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி மற்றும் 42 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் பதவிகளை பிடிக்க விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ச்சியாக நிர்வாகிகள் வந்து விருப்ப மனுக்கள் கொடுத்து வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் பெண்களுக்கான வார்டுகளும் 50 சதவீதம் உள்ளன. இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் வார்டுகளில் தங்களுக்கு பதில், தங்கள் மனைவி, மகள், மருமகள் உள்ளிட்டவர்களை களத்தில் இறக்கி விருப்ப மனுக்கள் கொடுத்து வருகிறார்கள்.
பரபரப்பு
அ.தி.மு.க.விலும் இந்த அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் போட்டிப்போட்டு விருப்ப மனுக்கள் கொடுக்கிறார்கள். காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ஜனதா என்று அனைத்து கட்சி அலுவலகங்களிலும் விருப்ப மனு பெற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கட்சி அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. கட்சி அலுவலகங்களும் பரபரப்படைந்து வருகின்றன.
இதற்கிடையே தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதால், ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது நீடிக்குமா அல்லது பொது பட்டியலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே மேயர் பதவியை எதிர்பார்த்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் மனைவியர் அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு விருப்ப மனு வழங்கியதுபோல் தங்கள் பெயருக்கும் மனுக்களை வழங்க தயாராக இருக்கிறார்கள்.
யார் அடுத்த மேயர்
ஈரோடு நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்ந்தபோது தி.மு.க.வை சேர்ந்த குமார் முருகேஸ் ஈரோட்டின் முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார்.
அதற்கு அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மல்லிகா பரமசிவம் வாக்காளர்களின் நேரடி ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்று, ஈரோடு மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமையை பெற்றார். அதற்கு பின்னர் தேர்தல் நடைபெறவில்லை. நடைபெற உள்ள தேர்தலில் கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு, கவுன்சிலர்களின் மறைமுக வாக்குகள் மூலம் மேயர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். அவர் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்? என்ற பரபரப்பு பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது.

Next Story