வால்பாறையில் கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தைகள்


வால்பாறையில் கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தைகள்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:46 PM IST (Updated: 30 Nov 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தைகள்

வால்பாறை

வால்பாறையில் பட்டப்பகலில் கன்றுக்குட்டியை சிறுத்தைகள் அடித்து கொன்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். 

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் காட்டுயானை, சிறுத்தை,  காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள்  அவதியடைந்து வருகிறார்கள். 

இதற்கிடையே கடந்த வாரத்தில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கு மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டை கவ்வி செல்ல முயன்றது. அதை பார்த்த மாணவர்கள் கூச்சலிட்டதால் ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. 

சிறுத்தைகள் புகுந்தன 

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் வால்பாறை அருகில் உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் விக்டர் என்ப வரின் கன்றுகுட்டி எஸ்டேட் 1-ம் நம்பர் பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அருகே உள்ள சிறுகுன்றா எஸ் டேட் இடைச்சோலை வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தைகள் திடீரென்று வெளியே வந்தன. 

பின்னர் அந்த சிறுத்தைகள் அந்த கன்றுக்குட்டியை அடித்து தூக்கிச்சென்றது. இதனால் அந்த கன்றுக்குட்டி அலறியதால் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது அந்த சிறுத்தைகள் கன்றுக்குட்டியின் கழுத்தை கடித்துக்கொண்டு இருந்தன. 

கன்றுக்குட்டியை கொன்றது 

உடனே அவர்கள் கூச்சலிட்டதால், அந்த சிறுத்தைகள் கன்றுக் குட்டியை போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடின. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த கன்றுக்குட்டி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. 

தொடர்ந்து அங்கு வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அங்கு கேமராக்களும் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

வால்பாறை அருகே பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைகள் கன்றுக்குட்டியை அடித்து கொன்றதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கஞ்சமலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அங்கு தனியாக செல்ல வேண்டாம். மேலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். 


Next Story