ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது-மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:20 AM IST (Updated: 1 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோர முடியாது என்று கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி, கடந்த 1998-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வீரபாரதி உள்பட 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதன்பேரில் அவர்களுக்கு விதித்த தூக்குத்தண்டனை, ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து வீரபாரதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் இவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவரே நீதிபதிகள் முன்பு ஆஜராகி வாதாடினார். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சில வாரங்களுக்கு முன்பு வரை அவர் பரோலில் இருந்தார். அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததால், வீரபாரதியை சென்னை புழல் சிறை சூப்பிரண்டு முன்பாக சரணடையும்படி 2 வாரத்துக்கு முன்பு ஐகோர்ட்டு உத்தரவிட்டு, அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. அதன்படி அவர் புழல் சிறையில் சரணடைந்தார்.
இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உரிமை கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை என்று சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. அதன்படி மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story