அரசு ஊழியர் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை


அரசு ஊழியர் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Dec 2021 1:23 AM IST (Updated: 1 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, பட்டப்பகலில் அரசு ஊழியர் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாடிக்கொம்பு:

அரசு ஊழியர் மனைவி

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனியை சேர்ந்தவர் துரை. இவர், திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவரது வீட்டில் மராமத்து பணி நடந்து வருகிறது.

நேற்று காலை 10 மணிக்கு வழக்கம்போல் துரை வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சுஜாதா (வயது 55) வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர், துரை வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்கு அளவு எடுக்க வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை நம்பிய சுஜாதா, வீட்டுக்குள் அந்த நபர்களை அனுமதித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள், சுஜாதாவை ஷோபாவில் தள்ளி அவரது கை, கால்களை கயிறால் கட்டினர். 

நகை, பணம் கொள்ளை

பின்னர் சுஜாதா கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளை, கொள்ளையர்கள் கழற்றினர். மேலும் அவரை மிரட்டி பீரோ சாவியை அவர்கள் வாங்கினர். பீரோவை திறந்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்தனர். 

அந்த சமயத்தில், துரை தனது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்டார். போனை சுஜாதா எடுக்கவில்லை. கொள்ளையர்களின் ஒருவன் போனை எடுத்து பேசினான். 

எதிர்முனையில் பேசிய அவன், உங்கள் மனைவியை கட்டி போட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு புறப்பட்டு செல்கிறோம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துரை, தனது அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு விரைந்தார். இதற்கிடையே கொள்ளையர்கள் சென்றவுடன் கயிற்றை அவிழ்த்து விட்டு சுஜாதாவும் வீட்டுக்கு வெளியே வந்து விட்டார்.

  வாலிபரை பிடித்து விசாரணை

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு துரை தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அங்கு சென்று விசாரித்தார். போலீசாருக்கு சவால் விடும் வகையில், பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

 மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், வாலிபர் ஒருவரை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story