மதுரையில் இருந்து கோவை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பழனியில் 1 மணி நேரம் நிறுத்தம்


மதுரையில் இருந்து கோவை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பழனியில் 1 மணி நேரம் நிறுத்தம்
x

மதுரையில் இருந்து கோவை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பழனியில் 1 மணி நேரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

மதுரை, 

மதுரையில் இருந்து கோவை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பழனியில் 1 மணி நேரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மீட்டர்கேஜ் பாதையில் ரெயில்கள் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர், அகலரெயில்பாதை பணிக்காக இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அகலப்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்ட போது, மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட பழைய ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே மறுத்து வருகிறது. தென்மாவட்டங்களுக்கான ரெயில்வே திட்டங்களை பொறுத்தமட்டில், ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்ற மெத்தனமான பதிலை வைத்துள்ளதாக பயணிகள் நலச்சங்கங்கள், எம்.பி.க்கள் ஆகியோர் குற்றம் சுமத்துகின்றனர்.
தென்னக ரெயில்வேயின் இந்த பாரபட்ச நடவடிக்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மதுரை கோட்ட ரெயில்வேக்கான எம்.பி.க்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

மதுரை-கோவை சிறப்பு ரெயில்

அதன்படி, மதுரையில் இருந்து பழனி வழியாக கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06480) மதுரையில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.10 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடைகிறது. அதே ரெயில் பழனியில் இருந்து வண்டி எண் மட்டும் மாற்றப்பட்டு (வ.எண்.06462) காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து அந்த ரெயில் (வ.எண்.06463) மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி ரெயில் நிலையம் வந்தடைகிறது. மீண்டும் பழனியில் இருந்து வண்டி எண் மாற்றப்பட்டு (வ.எண்.06479) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

மதுரை பயணிகள் அவதி

இதில், மதுரையில் இருந்து செல்லும் ரெயில் பழனியில் எவ்வித காரணமும் இன்றி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு கோவைக்கு இயக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கிடையே, மதுரையில் இருந்து செல்லும் ரெயில் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று வாடிப்பட்டி செல்கிறது. இதற்கு 36 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், பழனியில் இருந்து மதுரை வரும் ரெயில் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 29 கி.மீ.தூரம் கொண்ட மதுரை ரெயில் நிலையத்துக்கு வர 1 மணி நேரம் 10 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.
ஏற்கனவே, பழனியில் ஒரு மணி நேரம், திரும்பி வரும் போது, வாடிப்பட்டியில் இருந்து கூடுதலாக ½ மணி நேரம் என தேவையற்ற நேர விரயம் ஏற்படுகிறது. மதுரையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 7.55 மணிக்கு வாடிப்பட்டி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வாடிப்பட்டியில் இருந்து 6.31 மணிக்கு புறப்படும் ரெயில் 7.40 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. அத்துடன், மதுரை-திண்டுக்கல் இடையே இரட்டை அகல ரெயில்பாதை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த ரெயிலில் சென்று வரும் மதுரை பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அம்ரிதா எக்ஸ்பிரஸ்

அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரை வரும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, இந்த ரெயில்களை உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story