மதுரை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


மதுரை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:04 PM GMT (Updated: 30 Nov 2021 8:04 PM GMT)

இரவு சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த மதுரை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.. சென்னை காதல் ஜோடி மாயமான விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை, 

இரவு சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த மதுரை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.. சென்னை  காதல் ஜோடி மாயமான விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

மதுரையில் சம்பவத்தன்று சினிமா பார்த்துவிட்டு, தான் வேலைபார்த்த கடை உரிமையாளருடன் மோட்டார் சைக்கிளில் 23 வயது இளம்பெண் சென்றுள்ளார். நேதாஜி ரோட்டில் திலகர்திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன் (வயது 40), ஊர்க்காவல் படை வீரர் ஒருவருடன் இரவு நேர சோதனையில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த பெண்ணையும், அவருடன் வந்தவரையும் போலீஸ்காரர் முருகன் தடுத்து நிறுத்தி மிரட்டியதுடன், கடை உரிமையாளரிடமிருந்து ரூ.11 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை பறித்துள்ளார். அவரை அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்த பகுதியில் உள்ள விடுதிக்கு அந்த இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த பெண் வேலைபார்த்த கடை உரிமையாளரிடம் பறித்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாயும் எடுத்துள்ளார்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்னரே இந்த விவகாரம் குறித்து அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் முருகன் மீது பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பணியிடை நீக்கம்

மேலும் அவரை இரவோடு இரவாக மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கிளைச்சிறையில் அடைத்தனர். போலீஸ்காரர் முருகனை பணியிடை நீக்கம் செய்தும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மேலும் எல்லீஸ்நகரில் உள்ள முருகன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி கடை உரிமையாளரிடம் ரொக்கமாகவும், ஏ.டி.எம். கார்டு மூலமும் பறித்த 41 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.

அதிர்ச்சி தகவல்கள்

கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
போலீஸ்காரர் முருகன் இரவு ரோந்து பணியின் போது தனியாக மோட்டார் சைக்கிள் அல்லது நடந்து வருபவர்களை மறித்து விசாரணை என்ற பெயரில் அவர்களை மிரட்டி பலரிடம் பணம் பறித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து காதல் ஜோடி ஒன்று மதுரைக்கு வந்துள்ளது. அவர்கள் இருவரையும் ரெயில் நிலையம் அருகே விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு, விசாரணைக்கு அழைக்கும் போது வருமாறு கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த ஜோடி மதுரையில் இருந்து வேறு ஊருக்கு சென்று மாயமாகிவிட்டனர். அதுகுறித்து அவர்களது பெற்றோர் சென்னை போலீசில் புகார் அளித்தனர்.

பல்வேறு புகார்கள்

போலீசார் காதல் ஜோடி வைத்திருந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த செல்போன் போலீஸ்காரர் முருகனிடம் இருப்பது சென்னை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் முருகனிடம், அந்த செல்போன் கிடைத்தது எப்படி? என்று விசாரித்த போது காதல் ஜோடி தப்பி செல்லாமல் இருக்கவும், விசாரணைக்கு வர வேண்டும் என்பதற்காகவும் போனை வாங்கி வைத்திருந்ததாக கூறி அப்போது தப்பினார்.
இதே போன்று பல்வேறு புகார்கள் அவரைப்பற்றி வந்தன. இந்தநிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் அவர் சிக்கிவிட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story