‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூங்கா பராமரிக்கப்படுமா?
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் மரம், செடி, கொடிகள், வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே இந்த பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், முத்தம்பாளையம்.
மின்விளக்கு ஒளிரவில்லை
கோபி லக்கம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட நேருநகர் தெற்கு வீதியில் ஒரு மின்கம்பத்தில் மட்டுமே விளக்கு ஒளிர்கிறது. தெருவில் உள்ள மற்ற 2 கம்பங்களிலும் உள்ள விளக்குகள் எரியவில்லை. மேலும் இந்த பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெள்ளிங்கிரி, நேருநகர், கோபி.
இடிந்து விழும் நிலையில் கட்டிடம்
கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் தபால் நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் மேல் கான்கிரீட் தளங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து காணப்படுகிறது.. இதேபோல் கிராமப்புற நூலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மழைக்காலங்களில் புத்தகங்களைப் பாதுகாப்பது சிரமமாக உள்ளது. உடனே இந்த 2 கட்டிடங்களையும் சீரமைக்க அல்லது புதிதாக கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், கவுந்தப்பாடி
தேங்கும் கழிவுநீர்
சோலார் முனியப்பன் கோவில் அருகே உள்ள ரோட்டில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
-பொதுமக்கள், சோலார்.
குப்பைகள் அகற்றப்படுமா?
ஈரோடு சுத்தானந்த நகர் ஓடை மேடுவில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சுத்தானந்த நகர்
குழப்பமான பெயர் பலகை
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி வாரச் சந்தைக்கு செல்லும் சிங்கம்பேட்டை பிரிவு ரோட்டில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. இந்த பெயர் பலகை சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை 3 கிலோ மீட்டர் என 2 ஊர்களையும் ஒரே பகுதியிலேயே காட்டுவதால் வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர். அந்தியூரில் இருந்து வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் சிலர் சிங்கம்பேட்டை செல்லும் வழியிலேயே அம்மாபேட்டையையும் காட்டுவதால் சிங்கம்பேட்டைக்கு சென்று பின்பு அங்கு விசாரித்துவிட்டு மீண்டும் மேட்டூர் ரோட்டில் அம்மாபேட்டை வருகின்றனர். இதனால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் குழப்பம் அடையாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயர் பலகையை முறையாக சரி செய்து வைக்க வேண்டும்.
- முருகன், அம்மாபேட்டை.
கட்டிடம் சீரமைக்கப்படுமா?
பவானி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சி வேலாமரத்தூர் காலனியில் கடந்த 2009-2010-ம் ஆண்டில் அங்கன்வாடி பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பள்ளிக்கூட கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. கட்டிடத்தின் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி மரம், செடி, கொடிகள் முளைத்து கட்டிட வளாகத்துக்குள் தண்ணீர் விழுகிறது. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே உடனே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், வேலாமரத்தூர் காலனி.
புதர்கள் அகற்றப்படுமா?
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விற்பனைக்கூட கிடங்குகள் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே புதர்களை வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, பூதப்பாடி.
Related Tags :
Next Story