வீடு புகுந்து கொள்ளை; 4 பேர் கைது - 43 பவுன் தங்க நகைகள் மீட்பு
காஞ்சீபுரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம், பெரியார்நகர் சுதர்சன் விரிவாக்கம் நகரில் வசித்து வருபவர் கவிதா. இவர் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கவிதா தனது குடும்பத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அன்று தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் மறுநாள் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 43 சவரன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து தாலுகா போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில், தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் தஞ்சாவூரில் கொள்ளையர்கள் இருப்பதை அறிந்த போலீசார் விரைந்து சென்று சிவகங்கையை சேர்ந்த ராஜாராம் (வயது 26), கார்த்திக் ராஜா (24), சேலத்தை சேர்ந்த மனோஜ் (35), திண்டுக்கலை சேர்ந்த தீலிப் திவாகர் (26) ஆகியோர்களிடம் துருவி துருவி விசாரித்ததில் வீடு புகுந்து தங்க நகை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 43 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story