சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி


சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி
x
தினத்தந்தி 1 Dec 2021 2:11 PM IST (Updated: 1 Dec 2021 2:11 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவியை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் யூட்டிகா (வயது 13). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கனமழையால் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேர் மழைவெள்ளத்தை வேடிக்கை பார்க்க சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர்.

அங்கு ரெட்டிபாளையம் மதகில் இருந்து வெளியேறிய வெள்ளம் சாஸ்திரம்பாக்கம் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடின. சுமார் 4 அடி உயரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆர்ப்பரித்து சென்ற இந்த வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபடி விளையாடி கொண்டிருந்த 3 பேரில் எதிர்பாராதவிதமாக யூட்டிகா மட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அலறிய மற்ற 2 பேரும் வீட்டுக்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மறைமலைநகர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கபபட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவியை தேடி வருகின்றனர்.

Next Story