மவுலிவாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
மவுலிவாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மவுலிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில நாட்களாக மழைநீர் இடுப்பளவு தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு தங்களது உறவினர்களின் வீடுகளில் அகதிகள் போல் சென்றுள்ளனர்.
மேலும் சிலர் அந்த தண்ணீரிலேயே வீட்டுக்குள் வசிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது இங்கிருந்து மழை நீரை முறையாக அகற்றவில்லை என்று அந்த பகுதி மக்கள் மவுலிவாக்கம் - மாங்காடு செல்லும் சாலை, மவுலிவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மாங்காடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்து விட்டனர். மேலும் போரூர் ஏரி நிரம்பி விட்டதால் அந்த நீர் ஊருக்குள் வந்து விட்டதாகவும் அந்த நீரை அதிகாரிகள் முறையாக அகற்றவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களாக இடுப்பளவு தண்ணீரில் வசித்து வரும் நிலையில் மழைநீரை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இடுப்பளவு தேங்கியுள்ள மழை நீரிலேயே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்க கட்டைகளை படகு போல் பயன்படுத்தி அதில் சென்று வருகின்றனர். அரசு சார்பில் நிவாரண உதவிகள் எதுவும் வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மனோகரன் அங்கிருந்த கால்வாயை உடைத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். மேலும் கரையை மேலும் உடைத்து தண்ணீரை அதிகமாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story