‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
சென்னை புரசைவாக்கம் 104-வது வாா்டுக்குட்பட்ட சரவண பெருமாள் தெருவில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களுக்கும், பாதசாரிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி கவனத்துக்கும் பலமுறை கொண்டு சென்றுவிட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
- பொதுமக்கள், சரவண பெருமாள் தெரு.
நடைபாதை நடப்பதற்கு தானே...
சென்னை, பல்லாவரம் நகராட்சி கீழ்கட்டளை பஸ் நிலையம் முதல் திருவள்ளூவர் நகர் மெயின் ரோடு வரை செல்லும் வழியில் நடைபாதையின் குறுக்கே ஒரு கடையின் பயன்பாட்டுக்காக ஜெனரேட்டர் வைத்து அடைத்திருக்கிறார்கள். இதனால் அந்த நடைபாதையில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜெனரேட்டரை அகற்றி மக்கள் நடைபாதையை மீட்டு தரவேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், கீழ்கட்டளை.
சாலையில் பள்ளம்
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 126-வது தெருவில் சாலையின் நடுவில் பள்ளம் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது. இந்த பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சு.மணிகண்டன், கொடுங்கையூர்.
வேகத்தடை அமைக்கலாமே...
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள கொத்தவால்சாவடி தெரு, மசூதி தெரு, வி.வி.கோவில் தெரு சந்திக்கும் இடத்தில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும். இங்கு அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது. கிண்டியில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் வரும்போது விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
- எம்.மகாராஜன், சைதாப்பேட்டை பொதுநல சங்கம்.
எரியாத தெருவிளக்கு ஏன்?
சென்னை கொரட்டூர் வடக்கு பகுதியில் உள்ள ராஜீவ்நகர் தெருவில் மின்விளக்கு எரியாமலேயே இருக்கிறது. இதனால் அப்பகுதியினர் மாலை, இரவு வேளைகளில் வெளியே நடமாடவே தயங்குகிறார்கள். அருகில் உள்ள கடைகளுக்கு செல்லக்கூட சங்கடப்படுகிறார்கள். எனவே இத்தெருவில் உள்ள மின்விளக்கு எரிய செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள், ராஜீவ்நகர்.
சட்டவிரோத மது விற்பனை
சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி நகர் குடிசைப்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சில பெண்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். போலீசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.
குடிநீரில் கலந்து வரும் சாக்கடை நீர்
சென்னை மணலி புதுநகர் 53-வது பிளாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்துக்கும், பல்வேறு சுகாதார பிரச்சினைக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினை சரிசெய்யப்பட வேண்டும்.
- பொதுமக்கள், மணலி புதுநகர்.
தனி `டிரான்ஸ்பார்மர்’ தேவை
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் பாதிரித்தோட்டம் கிராமத்தில் நீண்ட காலமாக குறைந்த அழுத்த மின்சார பிரச்சினையால் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறோம். இதனால் மின் விளக்குகளில் வெளிச்சம் குறைவாக வருகிறது. இதர மின்சாதனங்களின் பயன்பாடும் முழுமையாக கிடைப்பதில்லை. டி.வி., குளிர்சாதன பெட்டி போன்ற சாதனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே பாதிரித்தோட்டம் கிராமத்துக்கு தனியாக `டிரான்ஸ்பார்மர்' பொருத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், பாதிரித்தோட்டம்.
கழிவுநீர் பிரச்சினையால் சிரமம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் 9-வது வார்டு சட்ராஸ் ரோடு குறுக்கு தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அடைப்புக்குள்ளாகி கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் படும் சிரமமும் தொடர்கதையாகி வருகிறது. எப்போது இந்த சாலை சரிசெய்யப்படும்? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- பா.சரவணன், தி௫க்கழுக்குன்றம்.
ரேஷன் கடை தூரம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடு வீரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட எட்டியாபுரம் கிராமத்துக்கு நீண்ட நாட்களாக தனியாக ரேஷன் கடை இல்லை. இதனால் 2 கி.மீ. தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுதான் நாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. எனவே. எட்டியாபுரம் கிராமத்துக்கு என தனியாக ரேஷன் கடையை அமைத்து தர வேண்டும். இது இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.
- கிராம மக்கள், எட்டியாபுரம்.
Related Tags :
Next Story