யானை தாக்கி விவசாயி சாவு


யானை தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 1 Dec 2021 2:43 PM GMT (Updated: 1 Dec 2021 2:43 PM GMT)

அந்தியூர் அருகே தோட்ட காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர் அருகே தோட்ட காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் பணி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி துருசனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தொட்ட மாதையன் (வயது 58). விவசாயி. இவரது விவசாய தோட்டம் தட்டக்கரை வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு அவர் 4 ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார்.
இந்த தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள்  புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற தொட்டமாதையன் தோட்டத்தில் பரண் அமைத்து இரவு அங்கேயே தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
யானை தாக்கி சாவு
அதேபோல் அவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் தங்கி காவல் காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தோட்ட பகுதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு தொட்டமாதையன் பரணில் இருந்து கீழே இறங்கி சென்று பார்த்தார்.
அப்போது அவர் எதிரே ஒரு யானை வந்து நின்றது. பனி மூட்டமாக இருந்ததால் தொட்டமாதையன் யானையை கவனிக்கவில்லை. திடீரென அந்த யானை தொட்டமாதையனை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது. 
இதைப்பார்த்த அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகள் இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தட்டக்கரை வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் ரூபன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் இறந்த தொட்டமாதையனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்க ஆவன செய்வதாக தெரிவித்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் தொட்டமாதையனின் உடலை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். அப்போது அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார்,  ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
அதற்கு உறவினர்கள் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட தொட்ட மாதையனின் குடும்பத்துக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும். வனவிலங்குகள் மலைக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், மலைவாழ் மக்களை தாக்கியும் வருகின்றன. எனவே வனவிலங்குகள் தோட்டத்துக்குள் புகாதவாறு தோட்டத்தை சுற்றி உடனே அகழி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 
பின்னர் எம்.எல்.ஏ. கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட தொட்டமாதையனின் குடும்பத்துக்கு விரைவில் நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் வனவிலங்குகள் தோட்டத்துக்குள் புகாதவாறு அதை சுற்றி அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட தொட்டமாதையனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story