மாம்பாக்கத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு
மாம்பாக்கத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையில் உள்ள கலைஞர் தெருவில் வசித்து வந்தவர் ஷியாம்சுந்தர் (வயது 23). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் மாம்பாக்கம் வழியாக திருவள்ளூர் நோக்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்தநிலையில், மாம்பாக்கம்-வேலகாபுரம் சாலையில் உள்ள ஒரு ஓடையை அவர் கடக்க முயன்றபோது, நீரின் வேகத்தால் ஷியாம் சுந்தர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த கிராம மக்கள் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், நீரின் வேகத்தால் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.தகவலறிந்து தேர்வாய் கிராமத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான ஷியாம் சுந்தரை தேடி வந்தனர்.
இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் வேட்டையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை மீண்டும் ஷியாம் சுந்தர் உடலை தேடும் பணியை மீட்புப்படையினர் மேற்கொண்டனர். அப்போது ஓடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அவரது உடல் முட்புதரில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர். இதையறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் ஷியாம் சுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story