திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்
திருநின்றவூர் அருகே ஏரிப்பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்ததால் நத்தமேடு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, நிரஞ்சன் நகர், எம்.எஸ். பவுண்டேஷன், திருமலை நகர், நத்தமேடு காலனி, சரவணா நகர், பாலாஜி நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாக்கம் தற்போது சுமார் 250 ஏக்கர் வரை தான் உள்ளது. காரணம் மீதமுள்ள ஏரிக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை பலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஏரியின் கலங்கல் பகுதியை ஒட்டி உள்ள இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடங்களில் வீடுகள், கடைகள், கம்பெனி உள்ளிட்டவற்றை கட்டி வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் வேண்டுகோள்
இதைப்போல் நத்தமேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரியில் இருக்கக்கூடிய நீரானது நிரம்பினால் கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி தாங்கல் ஏரிக்குச் சென்று அங்கிருந்து கிருஷ்ணா கால்வாயில் சென்று கலக்கும்.
ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் ஏரியில் சேமிக்கப்படாமல் கலங்கல் வழியாக வீணாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தேங்கியுள்ளது. தேங்கியுள்ள இந்த மழை நீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தண்ணீரில் பாம்பு, பூச்சிகள் வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இப்பகுதியை முறையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை வரன்முறை செய்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story