ஈரோடு மாவட்டத்தில் நாளை 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு; கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
1 லட்சம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 4-ந் தேதி (நாளை) 13-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 467 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 2-வது தவணை செலுத்த முன்வர வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணையாக போட்டு இருப்பவர்கள் 84 நாட்கள் நிறைவடைந்து இருந்தால் 2-வது தவணை செலுத்தலாம். கோவேக்சின் செலுத்தியவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்து இருந்தால் 2-வது தவணை போடலாம். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு உணவு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எனவே பொதுமக்கள் ஊசி போட்டுக்கொள்ள அச்சப்பட வேண்டாம்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்
கொரோனா தடுப்பூசி போடுவதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமுதாய தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்துக்கு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (வார் ரூம்) 80569 31110 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒமைக்ரான் தடுப்பு
தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று பாதிப்புகளை தடுக்க தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதமாக உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story